போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா- யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 74 பந்துகளிலும், மறுமுனையில் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளிலும் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது விக்கெட்டு இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்தது. இதில் ரோஹித் சர்மா 63 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
உணவு இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஜெய்ஸ்வால் சிறிது நேரத்திலேயே 9 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 57(74) ரன்களுடன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்களை குவித்தது. அவரைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 10(12) ரன்களில் கெமர் ரோச் பந்துவீச்சில் வெளியேற, ரோஹித் ஷர்மா மீது அழுத்தம் ஏற்பட்டது.
ஆனால் அதன்பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதேசமயம் மறுமுனையில் பெறுப்பான ஆட்டத்தை வெளிபப்டுத்தி வந்த ரோஹித் ஷர்மா முதல் டெஸ்டில் சதம் அடித்தது போல, இரண்டாவது டெஸ்டிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 80(143) ரன்கள் எடுத்தருந்த ரோஹித் ஷர்மா வாரிக்கன் பந்துவீச்சில் போல்டானார்.
அதன்பின்னரும் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, தொடர்ந்துவந்த ரஹானே 8(36) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஷானன் கேப்ரியல் பந்துவீச்சில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 288 ரன்களை குவித்தது. இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 8 பவுண்டரி உட்பட 87(161) ரன்களுடனும், ஜடேஜா 4 பவுண்டரி உட்பட 36(84) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
Be the first to comment on "இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி முதல்நாள் முடிவில் 288 ரன்களை குவித்தது."