சாய் சுதர்ஷனின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான்-ஏ அணியை இந்தியா-ஏ அணி வீழ்த்தி அசத்தியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034884

கொழும்பு: வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று கொழும்புவிலுள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில்  ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங்கை முதலில் தேர்வுசெய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் ஏ அணியின் தொடக்க வீரரான சைம் அயூப் மற்றும் ஒமைர் யூசுப் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி ஹங்கேர்கர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான சாஹிப்சதா ஃபர்ஹாம் மற்றும் ஹசீபுல்லா கான் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். இதில் ஃபர்ஹாம் 35(36) ரன்களுடன் ரியான் பராக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த காம்ரன் குலாம் 15(21) ரன்களுடனும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஹசீபுல்லா 27(55) ரன்களுடனும் மானவ் சுதர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் முகமது ஹாரிஸும் 14(13) ரன்களுக்கு மானவ் சுதர் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய காசிம் அக்ரம் ஓரளவு சமாளித்து ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் முபாசீர கான் 28(38) ,முகமது வாசீம்  ஷாநவாஸ் தஹானி 4(4) ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதில் மெஹ்ரான் மும்தாஸ் மட்டும் 25(26) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராஜ்வர்தன் ஹங்கேர்கர் 5 விக்கெட்டுகளையும், மானவ் சுதர் 3 விக்கெட்டுகளையும், ரியான் பராக், நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா -சாய் சுதர்ஷன் ஜோடியில் அபிஷேக் சர்மா 20(28) ரன்களுக்கு முபாசீர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்ஷன் -நிகின் ஜோஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்நிலையில் 53(64) ரன்கள் எடுத்திருந்த நிகின் ஜோஸ் மெஹ்ரான் மும்தாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தியதுடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதில் சாய் சுதர்சன் 104(110) ரன்களுடனும், கேப்டன் யாஷ் துல் 21(19) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

இதனால் இந்திய ஏ அணி 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

Be the first to comment on "சாய் சுதர்ஷனின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான்-ஏ அணியை இந்தியா-ஏ அணி வீழ்த்தி அசத்தியது."

Leave a comment

Your email address will not be published.


*