டொமினிக்கா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிக்காவிலுள்ள விண்ட்ஸர் பார்க் டொமினிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 64.3 ஓவருக்கு 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்- ரோஹித் சர்மா இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 23 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் 40(73) ரன்களுடனும், ரோஹித் சர்மா 30(65) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த இருவரில் இந்திய அணியின் அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். இதனால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்த 13ஆவது இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.
அவரைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15ஆவது அரைசதத்தைக் கடந்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜெய்ஸ்வால் 62 ரன்களுடனும், ரோஹித் சர்மா 68 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இதையடுத்து 4 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரி உட்பட 100(215) ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அதேசமயம் மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மாவும் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட சதமடித்து அசத்தினார். ஆனால் 103(221) ரன்கள் எடுத்தபோது அலிக் அதானாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் குவித்தது.
இவரைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் வெறும் 6(11) ரன்னுடன் ஜோமல் வேரிக்கன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷூப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 113 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 312 ரன்கள் குவித்து மிக வலுவான நிலையில் உள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி உட்பட 143(350) ரன்களுடனும், விராட் கோலி 1 பவுண்டரி உட்பட 36(96) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, தற்போது வரை மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட இந்தியா 162 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Be the first to comment on "ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார சதத்தால் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலையில் உள்ளது."