மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வருவது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034871

பார்படாஸ்: நடந்துமுடிந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய இந்திய அணி, ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ​​சுழற்சியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வரும் ஜூலை 12ஆம் தேதி டொமினிகாவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தொடங்கவிருக்கிறது.

அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி, கடந்த மாதம் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பிசிசிஐ சில வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்கள் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், ​​பேட்டிங் பிரதான வீரரான சேதேஷ்வர் புஜாரா சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அஜிங்க்யா ரஹானே மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,  உமேஷ் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பெறாத  ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 16 பேர் கொண்ட இந்திய அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

எப்போதும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அஸ்வின் அவரது ரசிகர்களுக்காக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் தனது ரசிகர்களிடம் பேசியுள்ள அவர், “நாங்கள் ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் கரையை அடைந்துவிட்டோம். எங்களுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஜெட்லாக்கை அகற்றிவிட்டு எங்கள் பயிற்சியைத் தொடங்கவுள்ளோம். தற்போதைய பயிற்சியாளர் ராகுல் பாய் எப்போதும் எங்களுக்கு பயிற்சியதளிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார். இது பயிற்சியின் செயல்முறை.

இருப்பினும் போட்டிக்கான பயிற்சியை சரியான முறையில் மேற்கொண்டு வந்தாலே, மீதமுள்ளவை தானே நடக்கும். இது சிந்தனை செயல்முறை. போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்வதில் நாங்கள் மிகவும் முன்னேறியுள்ளோம். உண்மையில், நான் தமிழ்நாடு பிரிமியர் லீக் சுற்றில் இன்னும் 6-7 போட்டிகள் விளையாட வேண்டும். ஆனால் நான் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடியிருந்த நிலையில், இங்குள்ள போட்டிகளில் களமிறங்க வர வேண்டியிருந்தது” என்று அஸ்வின் கூறினார்.

ஜூலை 12ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பார்வையாளர்களுக்கு தெரிவித்துள்ள அஸ்வின் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் பார்படாஸ் வந்துள்ளோம். ஏனென்றால், எங்களுடைய பயிற்சி முகாம் இங்கே உள்ளது. டொமினிகாவுக்குச் செல்வதற்கு முன் இங்கு இரண்டு நாள் போட்டி நடைபெறும்” இவ்வாறு தனது யூடியூப்  சேனலில் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வருவது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*