சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பௌலர். இதுவரை 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளும், 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ள அஸ்வின், ஐசிசி சிறந்த ஆல்ரவுண்டர் தரவரிசை வரிசையில் இரண்டாவது இடத்திலும், பந்துவீச்சில் முதலிடத்திலும் உள்ளார்.
குறிப்பாக இடது கை பேட்டர்களுக்கு எதிராக பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். அதேசமயம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் முதல் 8 பேட்டர்களில் 5 பேர் இடது கை பேட்டர்களாக இருந்தனர். அப்படியிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இறுதியில், இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இனி அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2025-ல்தான் நடைபெறும். ஆகையால், இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரை விடுத்து இளம் வீரர்களை களமிறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிவரை விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு, அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டனாக அஸ்வினை அறிவிக்க வேண்டும் என தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக் இதுகுறித்து பேசுகையில், “அஸ்வின் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட அனைத்து தகுதியும் உரிமையும் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். வரும் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம்தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தங்களது பி அணியை அனுப்புவதாக நான் கேள்விப்பட்டேன். இதற்கு கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனும் நியமிக்கப்பட உள்ளதாக அறிகிறேன்.
அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இல்லையெனில், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை பிசிசிஐ அஸ்வினுக்கு வழங்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்கு ஆற்றிவரும் பங்களிப்பினை கவனியுங்கள். ஒருமுறையாவது இந்திய அணிக்கு அஸ்வின் கேப்டனாக வேண்டுமென நான் நினைக்கிறேன். இந்திய அணியை வழிநடத்தும் திறமை அஸ்வினிடம் இருக்கிறது. ஒருநாள் இது நடக்கும் என நம்புகிறேன். அதற்கு அவர் தகுதியான நபர்தான்” இவ்வாறு தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை மூத்த ஆல்ரவுண்டர் வழிநடத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் விரும்புகிறார்."