மும்பை: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அத்தொடரில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி அரையிறுதிச் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடர் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 6 சுற்றுக்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. ஆனால் இந்த ஆறு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை மும்பையில் நேற்று அறிவித்தது. திட்டமிட்டபடி, அக்டோபர் 05ஆம் தேதி தொடங்கவுள்ள இப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம்பிடித்த நியூசிலாந்து அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பையை சொந்த மண்ணில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ சொந்த மண்ணில் ஐசிசி உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இங்கு கோப்பையை கைப்பற்றி உள்ளது. எனவே இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஏனென்றால் ஆட்டம் வேகமாகவும், அணிகள் முன்னெப்போதையும் விட நேர்மறையாகவும் விளையாடுகின்றன.
ஆகையால் இவை அனைத்தும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம் பல பரபரப்பான தருணங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என உறுதி அளிக்கிறது. வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நாங்கள் நன்றாகத் தயாராகி, சிறப்பாகச் செயல்படுவோம்” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்."