இந்தியாவின் வருங்கால டெஸ்ட் கேப்டனாக 3 வீரர்களை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்

www.indcricketnews.com-indian-cricket-news-10034840

மும்பபை: மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அடைந்த தோல்வியே சீனியர் வீரர்கள் நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேசமயம் ரோஹித் ஷர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்து அடுத்த கேப்டனை தேர்வு செய்வதாக தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்கள் பலர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதால், இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டிய நிலையும் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அனுபவமிக்க அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அந்த பொறுப்பிலிருந்த ரஹானே நீக்கப்பட்டதையடுத்து கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் என மாறி மாறி துணை கேப்டனாக இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அப்பதவி ரஹானே கைக்கு சென்றுவிட்டது.

இருப்பினும் இச்சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு நாம் பதில் தேட வேண்டும். தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ரஹானேவை துணை கேப்டனாக நியமனம் செய்ததை தவறு என்று சொல்ல மாட்டேன். இருப்பினும் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் இளம் வீரர்களுக்கு பேட்டிங், பவுலிங்கை கடந்து கேப்டன்சியிலும் அனுபவத்தை கொடுக்க வேண்டும்.

ஆனால் ஒரு இளம் கேப்டனை வளர்க்கும் வாய்ப்பை இந்த முறை தேர்வு குழு தவறவிட்டுள்ளது. குறைந்தபட்சம் இப்போதே சில வீரரிடம் அடுத்து உன்னை தான் கேப்டனாக நாங்கள் தேர்வு செய்வோம், அதற்கு தயாராக இரு என்று கூறி விடுங்கள். அப்போது தான் அவர்கள் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்வர்.

அதேசமயம் துணை கேப்டனாக இளம் வீரரை நியமிக்கும் போது, அவர்களால் கேப்டனுடன் அதிகமாக உரையாட முடியும். என்ன மாதிரியான ஃபீல்ட் செட் வைப்பது, எந்த வீரருக்கு எந்த பவுலர்களை பயன்படுத்துவது என்பது குறித்த திட்டங்களை கற்றுக்கொள்வார்கள். என்னை பொறுத்தவரை தற்போது ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரை துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஷுப்மன் கில் உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாகி வருகிறார்.

அதேபோல பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுவரும் அக்சர் படேல் ஒவ்வொரு போட்டியிலும் மெறுகேறி வருகிறார். இவர்கள் இருவரையும் துணை கேப்டனாக நியமித்திருந்தால், அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். இஷான் கிஷனையும் சரி வர விளையாட மாட்டார் என்று நாம் விலக்கி வைத்து விடமுடியாது. அணியில் தனக்கான இடத்தை உறுதிபடுத்திக் கொண்டால், இஷானும் கணக்கில் வரலாம்” இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்தியாவின் வருங்கால டெஸ்ட் கேப்டனாக 3 வீரர்களை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்"

Leave a comment

Your email address will not be published.


*