நியூ டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா பரவலின்போது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதேசமயம் இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் கட்ட இந்திய அணியினர் ஷிகர் தவான் தலைமையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், ஒருநாள் தொடர்களில் இரண்டாம் கட்ட இந்திய அணியே பங்கேற்று வந்தது. இளம் வீரர்களை கொண்ட அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார்.
இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து வேறெந்த வீரரும் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறவில்லை. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், தீபக் சஹர் ஆகியோருக்கு இந்திய அணி போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. இதன்காரணமாக அடுத்தகட்ட கேப்டனை உருவாக்குவதில் பிசிசிஐ பல சிரமங்களை சந்தித்து வருகிறது.
ஏனெனில் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் ஒரே வயதை கொண்ட வீரர்கள். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருதினாலும், அவர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிசிசிஐக்கு ஒரே வாய்ப்பாக ரிஷப் பந்த் மட்டுமே இருக்கிறார். இதற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் திலீப் வெங்சர்கார் இந்திய தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினரிடம் தொலைநோக்கு பார்வையோ, கிரிக்கெட்டை பற்றிய ஆழந்த அறிவோ அல்லது நுணுக்கங்களோ, எதிர்காலம் பற்றிய சிந்தனையோ எதுவும் இல்லாமல் அவர்கள் செயல்பட்டுள்ளதை நான் பார்ப்பது துரதிஷ்டவசமாகும். வெளிநாட்டு தொடர்களில் முதன்மை வீரர்கள் இல்லாமல் ஏராளமான சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமித்துள்ளனர். இதுபோன்ற தொடர்களில் தான் இந்தியாவுக்கான எதிர்கால கேப்டனை உருவாக்க முடியும். அதுதான் சிறந்த வழியும் கூட. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலைமை பொறுப்பை ஏற்கும் அளவிற்கு எந்த இளம் வீரரையும் பிசிசிஐ உருவாக்கவில்லை.
வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை வளர்க்காமல், அதற்கு மாறாக வளர்ந்து வருபவர்களை அப்படியே விளையாட விடுகிறீர்கள். இப்படித்தான் வருங்கால இந்திய கேப்டனை உருவாக்குகிறீர்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். இந்தியா உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உங்களுடைய பெஞ்சில் இருக்கும் வீரர்களின் பலம் என்ன? டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் முக்கிய வீரர்கள் காயமடைந்தால், மாற்று வீரர்களாக யார் தயாராக இருக்கிறார்கள்? தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும், ஐபிஎல் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல” இவ்வாறு இந்திய அணி நிர்வாகத்தை வெங்சர்க்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்
Be the first to comment on "இந்திய தேர்வாளர்களுக்கு கிரிக்கெட் பற்றிய தொலைநோக்கு பார்வையோ, ஆழமான அறிவோ இல்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் பிசிசிஐயை சாடியுள்ளார்."