நியூ டெல்லி :தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்யும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. ஏனெனில் தேர்வு குழுவினர் அணிக்கு தேவையான சில விஷயங்களை மறந்துவிட்டு நடக்கின்றனர். இதுபோன்று தவறுகள் நடக்கும் போதெல்லாம் தேர்வு குழுவினரை முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடுவதுண்டு. அப்படித்தான் தொடர்ந்து கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கியபோது பிசிசிஐ ஜூனியர் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரும் பந்துவீச்சு பயிற்சியாளருமான வெங்கடேஷ் பிரசாத் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தேர்வு குழுவினரை திட்டி தீர்த்துவிட்டார்.
அதேசமயம் சப்ராஸ்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்தும் அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடக்கமாக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவிருக்கிறது.
மேலும் இத்தொடருக்கு முன்னோட்டமாக ஜூன் 28ஆம் தேதி தொடங்கவிருக்கும் 2023க்கான துலீப் கோப்பையை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் இதற்கான அணியில் ஜலஜ் சக்சேனா,சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக 2022-23 ரஞ்சிக்கோப்பை சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்திய கேரள ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா என்ற வீரரை துலீப் கோப்பைக்கான தெற்கு அணியில் தேர்வு குழுவினர் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் சிரிப்பாகவும் கேவலமாகவும் இருப்பதாக முன்னாள் வேகபந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், “இந்திய கிரிக்கெட்டில் நகைப்புக்குரிய பல விஷயங்கள் நடக்கிறது. ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் துலீப் கோப்பை தொடருக்கான தெற்கு அணியில் இடம்பெறாதது வேடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற முடிவுகளால் ரஞ்சிக்கோப்பை தேவையில்லாத தொடர் என்ற தேர்வு குழுவினர் நினைத்துவிட்டார்களா.
இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா என்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். மேலும் 133 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், மொத்தம் 410 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் 34.74 சராசரியுடன் 14 சதங்கள் மற்றும் 32 அரை சதங்கள் உட்பட 6567 ரன்களை எடுத்துள்ள ஜலஜ் சக்சேனாவுக்கு 36 வயது ஆகிவிட்டதால் இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு குறைவு என்பதற்காகவே சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு தேர்வு குழுவினர் துலீப் கோப்பையில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Be the first to comment on "இந்திய கிரிக்கெட்டில் பல நகைப்புக்குரிய விஷயங்கள் நடப்பதாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்."