ஆசிய கோப்பை 2023 இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைப்ராட் மாடலில் நடைபெறவுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034818
LONDON, ENGLAND - JUNE 07: Mohammed Siraj and Virat Kohli of India celebrate after taking the wicket of Usman Khawaja of Australia during day one of the ICC World Test Championship Final between Australia and India at The Oval on June 07, 2023 in London, England. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

மும்பை:  பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இப்போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அதேசமயம், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டிய இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. 

இந்நிலையில் மற்ற நாடுகளெல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வராது என்றும் மிரட்டிப் பார்த்தது.

ஆனால் இதற்கெல்லாம் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அசரவில்லை. எனவே பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதையறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது. 

ஆனால் இதற்கு இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தலாம் என்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன. 

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்,  வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து  இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. அதேசமயம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஆசிய கோப்பை 2023 இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைப்ராட் மாடலில் நடைபெறவுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*