மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்க வாய்ப்புள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034843

டெல்லி: 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையையும் கைபற்றாத இந்திய அணி, நடந்துமுடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை பெறமுடியாமல் வெளியேறியது.

இந்த தோல்வியால் தற்போது ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்ஷிப் எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் அவர் கேப்டன் பொறுப்பில் செயல்பட்ட விதம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்யாமல் பந்துவீச்சை எடுத்தது. அதேசமயம் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரும் ஆல்ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காதது.

அதன்பின் அணியின் தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் பொறுப்பிலிருந்த ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது என அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் அதிகளவில் வருகின்றன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023/25 சுழற்சிக்கான தொடக்க ஆட்டமான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் ஷர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார் என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் அவருடைய கேப்டன்சி தவிர்த்து, பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட தவறும் பட்சத்தில், தேர்வாளர்கள் மிகப்பெரிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ஆனால் 2025ஆம் ஆண்டில் ஐசிசி 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயது இருக்கும் என்பதால், அவர் இந்த இரண்டு வருட சுழற்சியில் முழுவதுமாக நீடிப்பாரா என்பது ஒரு பெரிய கேள்வி. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, டிசம்பர் இறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் வரை வேறு எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை. எனவே தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவெடுக்க போதுமான நேரம் உள்ளது. அதற்குள் ஐந்தாவது தேர்வாளரான, புதிய தேர்வுக்குழு தலைவரும் இணையவுள்ளார். அவரோடு சேர்ந்து ஒரு முடிவை எடுக்க முடியும்.

இருப்பினும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியை ஏற்க ரோஹித் ஷர்மா தயக்கம் காட்டினார். அதேசமயம் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கே.எல்.ராகுல் கேப்டன்சி மீது பெரிதளவில் ஈர்க்கப்படாத முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அந்த பதவியை ஏற்கும்படி வற்புறுத்த வேண்டியிருந்தது,” இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள ரோஹித் ஷர்மா, அதில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளார். அதேசமயம் அந்த ஏழு போட்டிகளில், 14 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 35.45 சராசரியில் 390 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் 120 ரன்கள் எடுத்தது மட்டுமே அவரது ஒரே சிறந்த ஆட்டமாகும்.

Be the first to comment on "மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்க வாய்ப்புள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*