மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) முடிவடைந்ததை தொடர்ந்து , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது. ஆனால் நடப்பாண்டு ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஜெயித்து கோப்பையை வெல்ல இந்திய அணி களமிறக்க வேண்டிய ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள சுனில் கவாஸ்கர், அஜிங்க்யா ரஹானே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வீரராக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ரஹானே 5ஆவது வீரராக இறுதிப்போட்டியில் களமிறங்கி விளையாடுவார் என்று கருதுகிறேன். ஏனெனில் பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதன் மூலம் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானேவுக்கு தன்னை நிரூப்பிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
மேலும், இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம், இங்கிலாந்து மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை குவித்த அனுபவசாலி . எனவே, அவர் 5ஆவது வரிசையில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று நினைக்கிறேன். அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன். இது அவருக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு. அவருக்கு இருக்கும் அனைத்து அனுபவங்களுடனும் சேர்த்து இந்த வாய்ப்பையையும் அவர் கைப்பற்றி இந்திய அணியில் மீண்டும் அவருக்கான ஒரு இடத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன் ” இவ்வாறு கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோவில் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 11 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரஹானே மொத்தம் 326 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக மட்டும் ரஹானே டெஸ்ட் அணிக்கு திரும்பவில்லை, ரஞ்சி டிராஃபியில் அவர் வெளிப்படுத்திய அபாரமான செயல்பாட்டிற்காகவும் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. . ரஞ்சி டிராஃபியில் 11 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரஹானே 57.63 சராசரியுடன் 634 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நான்காவது அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.
Be the first to comment on "ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஜிங்க்யா ரஹானேவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்."