சென்னை: 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா -இஷான் கிஷன் ஜோடியில் ரோஹித் 11(10) ரன்களை மட்டுமே எடுத்து நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே இஷானும் 15(12) ரன்களுடன் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் க்ரீன்-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினர். இருப்பினும் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் 33(20) ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேமரூனும் 41(23) ரன்களுடன் க்ளின் போல்டானார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் டிம் டேவிட்டும் 13(13) யாஷ் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த நேஹல் வதேரா திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். ஆனால் 26(22) ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவும் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜோர்டனும் 4(7) ரன்களில் மோஹ்சின் கான் பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் வதேராவும் 23(12) ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் யாஷ் தாகூரிடம் ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ்- மான்கட் ஜோடியில் மான்கட் 3 ரன்களில் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் மேயர்ஸும் 18(13) ரன்களில் கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
ஆனால் அதன்பின் குர்னால் பாண்டியாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் சிக்ஸர் அடிக்க முற்பட்ட குர்னால் 8(11) ரன்களுடன் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் வெளியேற, தொடர்ந்துவந்த ஆயூஷ் பதோனி 1(7) ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றியும் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஸ்டோய்னிஸ் 40(27) ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாக, அடுத்துவந்த கிருஷ்ணப்பா கவுதம் 2(3) மற்றும் தீபக் ஹூடா 15(13) ஆகியோரும் ரன் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் களமிறங்கிய ரவி பிஷ்னோய் 3(6), மோஹ்சின் கான் 0(3) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் வெளியேறியதால், லக்னோ அணி 16.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்த மும்பை இந்தியன்ஸ், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஆகாஷ் மத்வாலின் அபார பந்துவீச்சால் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்."