சென்னை: 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான டெவான் கான்வே -ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் ருதுராஜ் அதிரடியாக விளையாட, மறுமுனையில் கான்வே ரன்கள் எடுக்க தடுமாறினார்.
இருப்பினும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய ருதுராஜ் 60(44) ரன்களுடன் மோஹித் ஷர்மாவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அதிரடி வீரர் ஷிவம் தூபே 1(3) ரன்னில் நூர் அகமத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி நடையைக்கட்டினார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 17(10) ரன்களுடன் தர்ஷன் நல்கண்டேவிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கான்வே 40(34) ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 17(9)ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சிலும், கேப்டன் தோனி ஒரு ரன்னுடன் மோஹித் ஷர்மா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இறுதியில் 22(16) ரன்களைச் சேர்த்திருந்த ஜடேஜாவும் ஷமி வீசிய கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில்- விருத்திமான் சஹா ஜோடியில் 12(11) ரன்களை மட்டுமே எடுத்திருந்த சஹா, தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 8(7) ரன்களுடன் தீக்ஷனா பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய தசுன் ஷனகா 17(16) ரன்களிலும், டேவிட் மில்லர் 4(6) ரன்களிலும் என ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேசமயம் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 42(38) ரன்களுடன் தீபக் சஹாரிடம் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே தீக்ஷனா பந்துவீச்சில் ராகுல் திவேத்தியா 3(5) ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் சங்கர் -ரஷித் கான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், விஜய் 14(10) ரன்களுடன் பதிரனா பந்துவீச்சிலும், அடுத்துவந்த தர்ஷன் நல்கண்டே ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 30(16) ரன்களைச் சேர்த்திருந்த ரஷித் கான், தேஷ்பாண்டேவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்தவந்த ஷமி 5(5) ரன்களுடன் ஆட்டத்தின் கடைசி பந்தில் பதிரனாவிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்த குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "பந்துவீச்சாளர்களின் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே."