பெங்களூர்: பிரம்மாண்டமாக தொடங்கிய 16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுகான போட்டியிலும் நீடித்தது.
அதேசமயம் அதேநாளில் பெங்களூரிலுள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற 70ஆவது லீக் ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியம் என்ற நிலையில் கடுமையாக போராடிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதில் விராட் கோலி ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் உட்பட 101(61) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதற்கு ஹர்திக் பாண்டியா, ஷூப்மன் கில் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷூப்மன் கில் அதிரடியாக சதமடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை இழந்த ஆர்சிபி அணி இம்முறையும் தொடரிலிருந்து வெளியேறியது.
மேலும் இப்போட்டியின்போது விஜயகுமார் வைஷாக் வீசிய 14.5ஆவது ஓவரில் விஜய சங்கர் ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்த விராட் கோலிக்கு அப்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய கோஹ்லி, அதன்பின் மைதானத்திற்கு திரும்பவரவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், கோஹ்லிக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் முடிவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், “விராட் கோலிக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. அவர் காலில் லேசான பிடிப்பு போல் இருக்கிறது. ஆனாலும் பயப்படும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். நான்கு நாள் இடைவெளியில் கோஹ்லி இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். அவர் பேட்டிங்கில் மட்டும் விளையாடினால் போதும் என்று நினைக்கக் கூடியவர் கிடையாது. பில்டிங்கிலும் தன்னுடைய 100% பங்கை கொடுத்து விளையாடக்கூடியவர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 ஓவரும் இன்று 35 ஓவரும் களத்தில் நின்று விளையாடியிருக்கிறார். கோஹ்லி எப்போதுமே அணிக்காக தன்னுடைய பெஸ்ட் தான் கொடுப்பார். இவ்வளவு கடும் உழைப்பை கொடுக்கும்போது உடலளவில் நிச்சயமாக ஏதேனும் பாதிப்பு அடையத்தான் செய்யும். இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவருக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை” இவ்வாறு சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
ஆதலால், வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி கண்டிப்பாக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக விராட் கோலியின் காயம் குறித்து சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்."