மும்பை: 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது.
இந்நிலையில் நேற்று வான்கடை மைதானத்தில் நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால்- விவ்ராந்த் சர்மா ஜோடி இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவருமே அரைசதம் கடந்துவந்த நிலையில், விவ்ராந்த் 69(47) ரன்கள் எடுத்தபோது ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 83(46) ரன்களைச் சேர்த்த நிலையில் ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கிளென் பிலீப்ஸ் ஒரு ரன்னுடன் கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 18(13) ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் 5(6) ரனகளுடன் களத்திலிருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடியில் இஷான் 14(12) ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவருமே அரைசதம் கடந்துவந்த நிலையில், 56(37) ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித், மயங்க் தாகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 25(16) ரன்களுடனும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் 100(47) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திருந்து மும்பை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் மும்பை அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுகான போட்டியிலும் நீடிக்கிறது. அதேசமயம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
Be the first to comment on "கேமரூன் க்ரீன் அபார சதத்தால், ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கிறது."