லக்னோ: 16ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நேற்று ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற 63ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போடியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான குயிண்டன் டி காக் -தீபக் ஹூடா ஜோடியில் ஹூடா 5(7) ரன்களுடன் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே இளம் வீரர் மான்கட்டும் ரன்கள் ஏதுமின்றிஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து பியூஷ் சாவ்லா வீசிய முதல் பந்திலேயே டிகாக் 16(15) ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் குர்னால் பாண்டியா -மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இருப்பினும் 16 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், குர்னால் பாண்டியா 49(42) ரன்களுடன் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரைசதம் விளாசி அசத்தியதுடன், கிறிஸ் ஜோர்டன் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஸ்டொய்னிஸ் 89(47) ரன்கள் குவித்திருந்தார். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -இஷான் கிஷன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 37(25) ரன்கள் எடுத்தபோது ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இஷான் அரைசதம் விளாசிய கையோடு 59(39) ரன்களுடன் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் -நேஹல் வதேரா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், வெறும் 7(9) ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாக, அவரைத்தொடர்ந்து வதேரா 16(20) ரன்களுடன் மொஹ்சின் கான் பந்துவீச்சிலும், விஷ்னு வினோத் 2(4) ரன்களுடன் யாஷ் தாக்கூர் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இறுதிஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், மொஹ்சின் கான் அபாரமாக பந்துவீசி வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த டிம் டேவிட் 32(19) ரன்கள் குவித்திருந்தார். இதன்மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Be the first to comment on "மோஹ்சின் கானின் அபார பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்."