அகமதாபாத்: 16ஆவது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 62ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத் அணி இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரரான விருத்திமான் சஹா ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் -சாய் சுதர்ஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்நிலையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கில் அரைசதம் கடக்க, மறுமுனையில் சுதர்ஷன் 47(36) ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 8(6), டேவிட் மில்லர் 7(5), ராகுல் திவேத்தியா 3(3) ஆகியோர் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து நடையைக்கட்டினர்.
அதேசமயம் மறுமுனையில் நிலைத்துநின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும் புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் கில் 101(58) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரஷீத் கான் ,முகமது ஷமி ஆகியோர் ரன்கள் ஏதுமகன்றி டக் அவுட்டாகியும், நூர் அகமத் ரன் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென், நடராஜன், ஃபரூக்கி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைபற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அன்மோல்ப்ரீத் சிங் 5(4) ரன்களிலும், அபிஷேக் சர்மா 5(5) ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 1(2) ,கேப்டன் ஐடன் மார்கம் 10(10), சன்விர் சிங் 7(6), அப்துல் சமாத் 4(3), மார்கோ ஜான்சன் 3(6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஹென்ரிச் கிளாசென் 64(44) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த புவனேஷ்வர் குமார் 27(26) ரன்களுடன் வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மோஹித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயால் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்த குஜராத் டைட்டன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதேசமயம் தொடரிலிருந்து ஹைதராபாத் அணி வெளியேறியது.
Be the first to comment on "34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் அணியாக பளே ஆஃப் சுற்றுக்கு முன்னியேது குஜராத் டைட்டன்ஸ்."