ஜெய்ப்பூர்: 16ஆவது ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் -விராட் கோலி ஜோடி நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கோஹ்லி 18(19) ரன்களை மட்டுமே எடுத்து கே எம் ஆசிஃபிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின்னர் டூபிளெசிஸுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கிளென் மேக்ஸ்வெல்லும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், டூபெளசிஸ் 55(44) ரன்களுடன் கே எம் ஆசிஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் லோம்ரார் 1(2) ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் ரன்கள் ஏதுமின்றி எல்பிடபள்யூ முறையிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மேக்ஸ்வெல் 54(33) ரன்களுடன் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்டானார். இறுதியில் அனுஜ் ராவத் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. இதில் அனுஜ் ராவத் 29(11) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஷ்வால் 0(2), ஜோஸ் பட்லர் 0(2), கேப்டன் சாம்சன் 4(5), தேவ்தத் படிக்கல் 4(4), துருவ் ஜுரெல் 1(7), ரவிச்சந்திரன் அஸ்வின் 0(0), ஆடம் ஸாம்பா 2(6), கேஎம் ஆசிஃப் 0(2) என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வரும் நிலையில் ,மறுபுறம் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி 35(19) ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேலும் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் 10 ரன்களைக் கடந்த ஒரே வீரும் ஹெட்மையர் மட்டுமே. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆர்சிபி அணி தரப்பில் வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை 112 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பிற்கு ஒரு அடி முன்னேறியுள்ளது.
Be the first to comment on "ஆர்சிபி அணியின் அபாரமான பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் 59 ரன்களுக்கு சுருண்டது."