கொல்கத்தா: 16ஆவது ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் – ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடியில் ஜேசன் ராய் 10(8)ரன்களிலும், ரஹ்மனுல்லா 18(12) ரன்களிலும் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த வெங்கடேஷ் ஐயர் -கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இந்நிலையில் 22(17) ரன்கள் எடுத்திருந்த ராணா யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஆண்ட்ரே ரஸல் 10(10) ரன்களுடன் கேஎம் ஆசிஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அரைசதம் கடந்த கையோடு 57(42) ரன்களில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷர்துல் தாக்கூர் 1(4) ரன்னுடன் அதே ஓவரில் எல்பிடபள்யூ முறையில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் 16(18) ரன்களுடன் சஹால் பந்துவீச்சிலும், தொடர்ந்துவந்த சுனில் நரைன் 6(5) ரன்களுடன் சந்தீப் சர்மா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 149 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஷ்வால் -ஜோஸ் பட்லர் ஜோடியில் கேப்டன் நிதீஷ் ராணா வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட ஜெய்ஷ்வால் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி 26 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் பட்லர் ரன்கள் ஏதுமின்றி அடுத்த ஓவரிலேயே ரன் அவுட்டானார். இருப்பினும் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்து சாதனைப் படைத்தார்.
மேலும் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஷ்வால் 13 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 98(47) ரன்களைச் சேர்த்து இரண்டு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் மறுமுனையில் சாம்சனும் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 48(29) ரன்களைச் சேர்த்து இரண்டு ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியளில் மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஜெய்ஷ்வால், சாம்சன் அதிரடியால் கேகேஆர் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது."