பாகிஸ்தான் 302-ல் சுருண்டு பாலோ-ஆன்

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மழை பாதிப்புக்கு மத்தியில் ரன்மழை பொழிந்தது.

 தொடக்க நாளில் ஆஸ்திரேலியா 73 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.   

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்த வார்னர், ஒரு நாள் போட்டி போன்று மளமளவென ரன்களை சேகரித்தார்.

அணியின் ஸ்கோர் 369 ரன்களாக உயர்ந்த போது, லபுஸ்சேன் 162 ரன்களில் போல்டு ஆனார். வார்னர்-லபுஸ்சேன் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 361 ரன்கள் திரட்டியது. 2-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி ஒன்று எடுத்த 2-வது அதிகபட்சம் இதுவாகும்.

அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். மறுமுனையில் இரட்டை சதத்தை கடந்த வார்னருக்கு அதிர்ஷ்ட தேவதையின் கருணையும் கிடைத்தது. வார்னர் 226 ரன்களில் இருந்த போது, புதுமுக வீரர் முகமது மூசாவின் பந்து வீச்சில் ‘கல்லி’ திசையில் நின்ற பாபர் அசாமிடம் பிடிபட்டார். ஆனால் ‘ரீப்ளே’யில் முகமது மூசா தனது காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால், வார்னருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

இந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட வார்னர் ‘டிரிபிள் செஞ்சுரி’ நோக்கி விசுவரூபம் எடுத்தார். இதற்கிடையே, சுமித் தனது பங்குக்கு 36 ரன்கள் (64 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேத்யூ வேட் நுழைந்தார். அவரது ஒத்துழைப்புடன் வார்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தனது முதலாவது முச்சதத்தை பூர்த்தி செய்தார். முச்சதம் அடித்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கும் உரியவர் ஆனார்.

வார்னர் தனது முதலாவது 100 ரன்களை 156 பந்துகளிலும், 2-வது 100 ரன்களை 104 பந்துகளிலும் எஞ்சிய 135 ரன்களை 158 பந்துகளிலும் எடுத்தார். மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்துவீச்சை தெறிக்கவிட்ட வார்னர் அவரது பந்து வீச்சில் மட்டும் 110 பந்துகளில் 111 ரன்களை திரட்டினார்.

ஆஸ்திரேலிய ‘சகாப்தம்’ டான் பிராட்மேனின் உச்சப்பட்ச ஸ்கோரான 334 ரன்களை வார்னர் முந்தியதும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

Be the first to comment on "பாகிஸ்தான் 302-ல் சுருண்டு பாலோ-ஆன்"

Leave a comment

Your email address will not be published.


*