மும்பை: 16ஆவது ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி- கேப்டன் ஃபாப் டூ பெளசிஸ் ஜோடியில்
கோஹ்லி 1(4) ரன்னிலும், தொடர்ந்துவந்த அனுஜ் ராவத் 6(4) ரன்களிலும் என ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த டூபிளெசிஸ் -கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேக்ஸ்வெல் 25 பந்துகளிலும், டூபிளெசிஸ் 30 பந்துகளிலும் என அடுத்தடுத்து தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இருப்பினும் மேக்ஸ்வெல் 68(33) ரன்களைக் குவித்திருந்த போது பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மஹிபால் லோமரோரும் 1(3) ரன்னுடன் குமார் கார்த்திகேயா பந்துவீச்சில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி 65(41) ரன்கள் எடுத்திருந்த டூபிளெசிஸும் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் -கேதர் ஜாதவ் ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தினேஷ் கார்த்திக் 30(18) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கிறிஸ் ஜோர்டனிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 199 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா- இஷான் கிஷன் ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிஷன் 42(21) ரன்களில் வநிந்து ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதே ஓவரில் வெறும் 7(8) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரோஹித் ஷர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் -நேஹல் வதேரா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்திசெய்த சூர்யகுமார் யாதவ் 83(35) ரன்களைச் சேர்த்து வைசாக் விஜயக்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே டிம் டேவிட் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் மறுமுனையில் நேஹல் வதேரா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்ததுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து 52(34) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "சூர்யக்குமார் யாதவ், நேஹல் வதேரா ஆகியோரின் அதிரடியால் ஆர்சிபி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது."