மொஹாலி: 16ஆவது ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் ஆடட்த்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் – கேப்டன் ஷிகர் தவன் ஜோடியில் பிரப்சிம்ரன் சிங் 9(7) ரன்களில் அர்ஷத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து தவானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் நிலைத்துநின்று விளையாடிய தவான் 30(20) ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் மேத்யூ ஷர்ட் 27(26) ரன்களுடன் பியூஷ் சாவ்லாவிடம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த லியாம் லிவிங்ஸ்டோன் -ஜித்தேஷ் ஷர்மா ஜோடி பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அதிரடியில் மிரட்டி வந்த நிலையில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டோன் 31 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ஜித்தேஷ் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு எதிரணியை ஸ்தம்பிக்கவைத்தர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது. இதில் லிவிங்ஸ்டோன் 82(42) ரன்களுடனும், ஜித்தேஷ் சர்மா 49(27) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடியில் ரோஹித் ஷர்மா ரன் ஏதுமின்றி ரிஷி தவான் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, தொடர்ந்துவந்த அதிரடி வீரர் கேமரூன் க்ரீன 23(18) ரன்களில் நாதன் எல்லிஸிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷன் -சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் 29 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் பவுண்டரிகளாக விளாசிய சூர்யக்குமார் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்நிலையில் சூர்யக்குமார் யாதவ் 66(31) ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 75(41) ரன்கள் குவித்திருந்த இஷானும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவர்களைத்தொடர்ந்து இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த டிம் டேவிட் – திலக் வர்மா ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதில் டிம் டேவிட் 19(10) ரன்களுடனும், திலக் வர்மா 26(10) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.
Be the first to comment on "சூர்யக்குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷனின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றபெற்றது."