மும்பை: ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியாக அமைந்துள்ள 42ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர்- யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஜோடியில் ஜெய்ஷ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் பட்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 18(19) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினாலும் 14(10) ரன்களில் வெளியேற, தொடர்ந்துவந்த தேவ்தத் படிக்கலும் 2(4) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் அரைசதம் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ஹோல்டர் 11(9), ஷிம்ரான் ஹெட்மையர் 8(9), துருவ் ஹுரெல் 2(3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆனால் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஜெய்ஷ்வால் 53 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்ஷ்வால் 124(62) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 212 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும் ,ஜோஃப்ரா ஆர்ச்சர், ரிலே மெரிடித் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 3(5) ரன்கள் மட்டுமே எடுத்து சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் தொடக்க வீரரான இஷான் கிஷனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் க்ரீன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இஷான் 28(23) ரன்கள் எடுத்தபோது ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேமரூன் 44(26) ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்ய்க்குமார் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக விளாசி 24 பந்துகளில் அரைசதம் குவித்தார் .இருப்பினும் 55(29) ரன்கள் எடுத்தபோது டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆடட்மிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா -டிம் டேவிட் ஜோடியும் அதிரடியில் மிரட்ட, கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட டிம் டேவிட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை அணி 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த டேவிட் 45(14) ரன்களையும், திலக் வர்மா 29(21) ரன்களையும் எடுத்திருந்தனர்.
Be the first to comment on "டிம் டேவிட் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிபெற்றது."