ஹைதராபாத்: 16ஆவது ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர்-
பிலிப் சால்ட் ஜோடியில் பிலிப் சால்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிவந்த மிட்செல் மார்ஷ் 25(15) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட வார்னர் 21(20) ரன்கள் எடுத்தபோது வாஷிங்டன் சுந்தரிடம் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதே ஓவரில் சர்ஃப்ராஸ் கான் 10(9), ஆமான் கான் 4(2) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவுசெய்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய மணீஷ் பாண்டே -அக்ஸர் படேல் ஜோடியில் அக்ஸர் 34(34) ரன்களில் புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே மணீஷ் 34(27) ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசிஓவரில் ரிபால் படேல் 5(6), அன்ரிக் நோர்ட்ஜே 2(2) ஆகியோர் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஹாரி ப்ரூக் -மயங்க் அகர்வால் ஜோடியில் ப்ரூக் 7(14) ரன்கள் எடுத்தபோது நோர்ட்ஜேவிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, தொடர்ந்துவந்த ராகுல் திரிபாதி 15(21) , அபிஷேக் சர்மா 5(5), கேப்டன் ஐடன் மார்க்ரம் 3(5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஆனால் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் 49(39) ரன்களின்போது ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் -ஹென்ரிச் கிளாசென் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது பவுண்டரியாக விளாசித்தள்ளிய கிளாசென் 31(19) முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜான்சன் 2(3), வாஷிங்டன் சுந்தர் 24(15) ஆகியோர் ஆட்டமிழககாமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இருப்பினும் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி சார்பில் அகஸர் படேல், ஆன்ரிக் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி அணி, நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
Be the first to comment on "எளிய இலக்கை அடையவிடாமல் ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் த்ரில் வெற்றிபெற்று அசத்தினர்."