மொஹாலி: 16ஆவது ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் -பிரப்சிம்ரன் சிங் ஜோடியில் முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பிரப்சிம்ரன் ஆட்டமிழக்க, மறுமுனையில் தவானும் 8(8) ரன்களில் ஜோஷூவா லிட்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார்ட் 36(24) ரன்கள் எடுத்தபோது ரஷீத் கானிடம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பனுகா ராஜபக்ஷா -ஜித்தேஷ் சர்மா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 25(23) ரன்கள் எடுத்த ஜித்தேஷ் சர்மா மோஹித் ஷர்மா பந்துவீச்சிலும், 20(26) ரன்கள் எடுத்த ராஜபக்க்ஷா அல்ஸாரி ஜோசஃப் பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த சாம் கரண்- ஷாருக்கான் ஜோடியில் அதிரடியாக விளையாட முற்பட்ட சாம் கரண் 22(22) ரன்களில் மோஹித் ஷர்மாவிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் ஷாருக்கான் 22(9) ரன்கள் எடுத்தபோது கடைசி ஓவரின் நான்காவது பந்தில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார்.
இறுதியில் ஹர்பிரீத் 8(5) ரன்களுடன் களத்திலிருக்க, ரிஷி தவான் 1(1) கடைசி பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் -விருத்திமான் சஹா ஜோடியில் அதிரடியாக விளையாடி வந்த சஹா 30(19) ரன்கள் எடுத்திருந்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்சன் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 19(20) ரன்களுடன் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 8(11) ரன்களுக்கு ஹர்ப்ரீத் பரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில், கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் 67(49) ரன்களுடன் சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டேவிட் மில்லர் 17(18) ரன்களுடன் களத்திலிருக்க, ராகுல் திவேத்தியா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதனால் குஜராத் அணி 19.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Be the first to comment on "பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது."