டெல்லி கேப்பிடல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10034344

டெல்லி: 16ஆவது ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின். டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் -பிரித்வி ஷா ஜோடியில் அதிரடியாக விளையாட முற்பட்ட ஷா 15(10) ரன்களை மட்டுமே எடுத்து ஹர்திக் ஷோகீனிடம் ஆட்டமிழந்தார்.

இவரைத்தொடர்ந்து வர்னருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மணீஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 26(18) ரன்களுடன் பியூஷ் சாவ்லாவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த யாஷ் துல் 2(4) ரிலே மெரிடித் பந்துவீச்சிலும், ரோவ்மன் பாவெல் 4(4), லலித் யாதவ் 2(4) ஆகியோர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையைக்கட்டினர். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

இருப்பினும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 22 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்த அக்ஸர் படேல், 54(25) ரன்களுடன் பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த இரண்டாவது பந்திலேயே 51(47) ரன்களைச் சேர்த்திருந்த வார்னரும் ஆட்டமிழந்தார். இவர்களைத்தொடர்ந்து அதே ஓவரில் குல்தீப் யாதவ் ரன் அவுட்டாகியும், அபிஷேக் பொரெல் 1 ரன்னுடன் வெளியேற, கடைசி ஓவரில் அன்ரிச் நார்ட்ஜே 5(3) மெரிடித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -இஷான் கிஷான் ஜோடியில் ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிஷான் 31(26) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாட, மறுமுனையில் ரோஹித் ஷர்மா நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இந்நிலையில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசிய திலக் வர்மா 41(29) ரன்களில் முகேஷ் குமாரிடம் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவும் ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இவர்களைத்தொடர்ந்து 65(45) ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா முஸ்தபிசூர் ரஹ்மானிடம் ஆட்டமிழந்ததால், கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் கேமரூன் க்ரீன் 17(8) மற்றும் டிம் டேவிட் 13(11) ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Be the first to comment on "டெல்லி கேப்பிடல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை அணி."

Leave a comment

Your email address will not be published.


*