பெங்களூர்: 16வது ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரிலுள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் – விராட் கோலி ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் கோஹ்லி பவுண்டரி, சிக்ஸருமாக விளாச முதல் 6 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்களைச் சேர்த்தது.
மேலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவுசெய்த கோஹ்லி 61(44) ரன்களை எடுத்திருந்தபோது அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய க்ளௌன் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் டூபிளெசிஸ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்து 24 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்த மேக்ஸ்வெல் 59(28) ரன்களை சேர்த்திருந்தபோது மார்க் வுட் வீசிய கடைசி ஓவரில் க்ளீன் போல்டானார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்திருந்த பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. இதில் 79(46) ரன்களை எடுத்திருந்த டூபெளசிஸ் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே முகமது சிராஜிடம் க்ளின் போல்டாகி ஏமாற்றமளித்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 9(10) ரன்களிலும், குர்னால் பாண்டியா ரன்கள் ஏதுமின்றியும் வெய்ன் பார்னெல் வீசிய அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் 65(30) ரன்களைச் சேர்த்திருந்தபோது ஸ்டோய்னிஸ் கரன் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழக்க ,அதற்கடுத்த ஓவரிலேயே கேப்டன் கே.எல்.ராகுல் 18(20) ரன்களுக்கு முகமது சிராஜிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்து வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்திசெய்து மிரட்டினார். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பூரன் 62(18) ரன்களில் முகமது சிராஜிடம் கேட்ச்சாகி வெளியேறினார். இறுதியில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் 30(24) ரன்கள் எடுத்திருந்த ஆயூஷ் பதோனி வெய்ன் பார்னெல் பந்துவீச்சில் ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார்.
இறுதியில் லக்னோ அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மார்க் வுட் 1(2), ஜெய்தேவ் உனாத்கட் 9(7) ஆகியோர் ஆட்டமிழந்தாலும், ரன்களை கட்டுப்படுத்த தவறினார். இதன்மூலம் லக்னோ அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
Be the first to comment on "ஸ்டோய்னிஸ், பூரன் அதிரடியால் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி."