அகமதாபாத் : 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச் 31) தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுவரும் சென்னை அணிக்கு கடந்தாண்டு நல்ல ஒரு ஆண்டாக அமையவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
எனவே கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட சிஎஸ்கே அணி, நடப்பாண்டு தோனி தலைமையின்கீழ் முழு பலத்துடன் களமிறங்குகிறது. பிளாக்பஸ்டர் தொடக்க ஆட்டத்தை பாக்கெட் செய்யவுள்ள சென்னை அணியின் ஆடும் லெவனை இங்கு பார்ப்போம். கடந்த இரண்டு சீசன்களில், தனது பேட்டிங் மூலம் தாக்கத்தை ஏற்படுத்திய வலதுகை பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குகிறார். அவருக்கு உறுதுணையாக நியூசிலாந்து இடதுகை பேட்டர் டெவோன் கான்வே களமிறங்கவுள்ளார்.
கடந்த இரண்டு சீசன்களில், சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மொயீன் அலி மூன்றாவது வீரராகவும், 2018ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவரும் அமபதி ராயுடு நான்காவது வீரராகவும் களமிறங்கவுள்ளனர். 2023 ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐந்தாவது வீரராக களமிறங்கவுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இவர், குஜராத் அணிக்கு எதிராக டாப் ஆர்டரை வலுப்படுத்துவதில் முக்கிய பங்குவகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர் வரிசையில், மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ரவீந்திர ஜடேஜா ஆறாவது வீரராக களமிறங்கவுள்ளார். முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சூப்பரான ஃபார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய தோனி ஏழாவது வீரராக களமிறங்கவுள்ளார். இருப்பினும்
ஐபிஎல் 2023இல் தனது அணிக்கு மற்றொரு கோப்பையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை, 2022 ஐபிஎல் தொடரில் சில காரணங்களால் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸை, சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் பதிப்பில் தக்கவைத்துக் கொண்டது.
சிஎஸ்கேவின் நட்சத்திர பௌலர் தீபக் சஹாருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 15ஆவது சீசனின் பெரும்பாலான போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நடப்பாண்டு தனது அனுபவம் மற்றும் திறமையால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு வரிசையை வலுப்படுத்தத் திரும்பியுள்ளார்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை, லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் ஐந்து உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதான பிரசாந்த் சோலங்கி சிஎஸ்கே அணிக்காக தனது அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தவுள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகி விளையாடிய 24 வயதான சிமர்ஜீத் சிங் 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். இருப்பினும் இனிவரும் சீசன்களில் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆடும் லெவனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கணித்துள்ளது."