கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் டி20 தொடர், அகமதாபாத்தில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக வரும் ஏப்ரல் 2ஆம் தேதியன்று களமிறங்கவுள்ளது.
கடந்த 15ஆவது சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இதனால் இந்த சீசன் மும்பை இந்தியன்ஸ்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மும்பை அணிக்கு பக்கபலமாக இருந்த பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக விலகியிருந்த இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தற்போது முழுஉடற்தகுதியுடன் இடம்பெற்றுள்ளார். ஆனாலும் பும்ரா வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.
அதேசமயம் கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் போன்ற தரமான ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால், மூன்றாவது ஆல்-ரவுண்டரைச் சேர்ப்பதில் மும்பை அணி குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று வருகிறார். இருப்பினும் இன்றுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.
கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி சார்பாக 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்ட அர்ஜூன், காயமடைந்ததால் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு 2022 ஐபிஎல் தொடரில், மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும் அர்ஜூனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன்பின்னர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், கடந்த ஆண்டில் கோவா அணிக்காக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டார். குறிப்பாக அவரது இடதுகை வேகம் சில நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுவரை 7 முதல் தர போட்டிகள், 7 லிஸ்ட் ஏ போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜூன், அனைத்து வடிவங்களிலும் மொத்தமாக 32 விக்கெட்டுகளையும், 268 ரன்களையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜுன் தொடக்க லெவன் அணியில் இடம் பெறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா,” நல்ல கேள்வி, நம்பிக்கையுடன் இருக்கலாம்” என்று மூன்று வார்த்தைகளில் பதிலளித்து நிருபர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். ஆனால் இதுகுறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில், “காயத்திலிருந்து வந்துள்ள அர்ஜூனை மதிப்பீடு செய்வோம். அணித்தேர்வுக்கு அவர் தகுதியாக இருந்தால் நல்லது. அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இளம் வீரர்களுக்கு சில இடங்களை ஒதுக்கலாம் என்று இருக்கின்றோம். இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஐபிஎல் ஒரு சிறந்த நடைமேடையாகும்” இவ்வாறு பவுச்சர் தெரிவித்தார்.
Be the first to comment on "அர்ஜுன் டெண்டுல்கரின் ஐபிஎல் பற்று குறித்து ரோஹித் சர்மா ஒரு வார்த்தை பதிலளித்தார்."