மும்பை: பெண்களுக்கான முதலாவது பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. சாம்பியன் கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்துநின்று விளையாட, மறுமுனையில் ஷஃபாலி வர்மா 11(4), அலைஸ் கேப்ஸி 0(2), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9(8) ஆகியோர் இசி வாங்க் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின் அணியை சரிவிலிருந்து மீட்க களமிறங்கிய மேரிஸன் கேப்பும் 18(21) ரன்கள் எடுத்தபோது அமெலியா கெர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த ஓவரிலேயே 35(29) ரன்கள் எடுத்திருந்த மெக் லெனிங் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அருந்ததி ரெட்டி ரன் ஏதுமின்றி அமெலியா கெர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெஸ் ஜோனாசென் 2(11), மின்னு மனி 1(9), டானியா பாட்டியா 0(2) ஆகிய மூவரும் ஹெய்லி மேத்யூஸின் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 15.6 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி 79 ரன்களுடன் தள்ளாடியது.
ஆனால் இறுதிவரை களத்திலிருந்த ஷிகா பாண்டே யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சருமாக விளாச, அவருக்கு உறுதுணையாக இருந்த ராதா யாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் எடுத்திருந்தது. இதில் ஷிகா பாண்டே 27(17) ரன்களுடனும், ராதா யாதவ் 27(12) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீராங்கனைகளான யஷ்திகா பாட்டியா 4(3) ரன்களில் ராதா யாதவ் பந்துவீச்சிலும், ஹெய்லி மேத்யூஸ் 13(12) ரன்களில் ஜெஸ் ஜோனாசென் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் -நாட் ஸ்கைவர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் 37(39) ரன்கள் எடுத்திருந்த கவுர் தேவையிலாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சிறப்பான விளையாடி வந்த நாட் ஸ்கைவர் அரைசதம் கடந்து அசத்த, அவருடன் இணைந்த அமெலியா கெரும் அதிரடியாக விளையாடினார்.
கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த நாட் ஸ்கைவர் 60(55) ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
Be the first to comment on "பெண்கள் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் வென்று அசத்தியது"