சென்னை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ள நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னயில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில், இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக இணைந்து உலக சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுமோசமாக சொதப்பி தோல்வியைத் தழுவியது.
அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் இடம்பெறாமல் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, இரண்டாவது போட்டியில் 13(15) ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். அதேபோல மறுபுறம் அணிக்கு நம்பிக்கை தரும்படி நிலைத்து நின்று விளையாடி வந்த விராட் கோலி 31(35) ரன்கள் எடுத்தபோது துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இன்னும் 2 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை குவித்த ஜோடி என்ற பெருமையை பெறுவார்கள். ஏனெனில் இந்த ஜோடி இதுவரை 85 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 62.47 சராசரியுடன் 4998 ரன்களை குவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 18 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர்.
சாதனையை நோக்கி நகர்ந்து வரும் இந்த ஜோடி, நாளை நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மீண்டும் இணைந்து ஒரு மேஜிக் செய்தால் மட்டுமே 97 இன்னிங்ஸ்களில் 5000 ஒருநாள் ரன்களை எட்டியுள்ள மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோரின் சாதனையை முறியடிக்க முடியும்.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை இந்தியர்கள் தான் தக்கவைத்துள்ளனர். முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய இருவரும் இணைந்து இதுவரை 176 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 8227 ரன்களை குவித்துள்ளனர். மேலும் இந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைக்க 2 ரன்கள் மட்டுமே தேவை."