மும்பை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறிய சூர்யக்குமார் யாதவ், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார்.
இதன்மூலம் டி20 போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ் ஒரே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் ஒரே வீரரிடம் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெல்லும் அணியே தொடரையும் வெல்லும் என்ற சூழலில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விக்கெட் இழந்த விதத்தை பார்த்து நாம் அவர் மீது அனுதாபம் கொண்டிருக்கலாம். ஏனெனில் மணிக்கு 145+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடதுகை பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் போன்ற ஒரு வீரரை எதிர்கொள்வது என்பது சவாலான காரியம்தான். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
ஸ்டார்க் எப்போதுமே ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை முதல் போட்டியில் எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், மீண்டும் அவர் ஸ்டம்பைத் தாக்கி பந்தை ஸ்விங் செய்வார் என்பதை கணித்து அதற்கு ஏற்றாற்போல் தயார் நிலையில் வந்திருக்க வேண்டும். இதன்காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. அதேசமயம் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான முடிவாக அமையாது. ஏனெனில் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” இவ்வாறு வாசிம் ஜாஃபர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இது குறித்து பேசுகையில்,“சூர்யகுமார் யாதவ்க்கு நிச்சயம் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும். அவர் தனது திறனை சிறப்பான முறையில் வெளிப்படுத்தக் கூடியவர். ஆகையால் அணியில் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதன்மூலம் மீண்டும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறோம்” என்று ரோஹித் தெரிவித்திருந்தார்.
Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யக்குமார் யாதவின் மோசமான ஆட்டம் குறித்து வாசிம் ஜாஃபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."