அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த ஆஸ்திரேலிய அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆனால் இந்திய அணியில் முகமது சிராஜுக்குப் பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்- உஸ்மான் கவாஜா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தனர்.
இதில் 7 பவுண்டரிகள் உட்பட 32(44) ரன்கள் எடுத்திருந்த ஹெட், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மார்னஸ் லபுஷேன் 3(20) ரன்களில் ஷமி போல்ட் ஆக்கினார். இதனால் மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது.
ஆனால் அதன்பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் கவாஜா- ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு 3 மணி நேரமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடிவருகின்றனர். இதன்மூலம் இரண்டாவது செஷன் முழுவதும் 40 ஓவர்களுக்கு மேல் 79 ரன்கள் வரை எடுத்திருந்த இவர்கள் இருவரில், கவாஜா 146 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 38(135) ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பீட்டர் ஹெட்ண்ட்ஸ்கோம்பும் 17(27) ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, தொடர்ந்து வந்த கேமரூன் க்ரீனும் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த கவாஜா 146 பந்துகளில் தனது 14வது டெஸ்ட் சதத்தை பதியுசெய்து அசதினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்தது. இதில் உஸ்மான் கவாஜா 15 பவுண்டரிகள் உட்பட 104(251) ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 8 பவுண்டரிகள் உட்பட 49(64) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேலூம் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 வீக்கெட்டுகளையும், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Be the first to comment on "கவாஜாவின் அபார சதத்தால், நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி வலிமையான நிலையில் உள்ளது."