மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 47 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை.

www.indcricketnews.com-indian-cricket-news-10034225

இந்தூர்: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரிலுள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் தலா 3 பவுண்டரிகளை அடித்த ரோகித் 12(23) ரன்களிலும், கில் 21(18) ரன்களிலும் குன்னமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1(4) ரன்னிலும், ஜடேஜா 4(9) ரன்னிலும் நாதன் லையனிடம் விக்கெட்டை பறிகொடுக்க, அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதுமின்றி சந்தித்த இரண்டாவது பந்திலேயே குன்னமேன் வீசிய பவுன்ஸ் ஆகாத பந்தை அடிக்க முயன்று இன்சைட் எட்ஜ் முறையில் போல்டாகி  நடையைக்கட்டினார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி -கே.எஸ்.பரத் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

இதில் ஓரளவு தாக்குப்பிடித்து சிறிதுநேரம் விக்கெட் இழப்பை தடுத்துவந்த கோஹ்லி 22(52) ரன்களுடன் முர்ஃபி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பரத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 17(30) ரன்களைச் சேர்த்திருந்தபோது நாதன் லையன் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய அஷ்வின் 3(12), உமேஷ் யாதவ் 17(13) ஆகியோர் குன்னமேன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க ,இறுதியில் அக்ஸர் படேலின் தேவையில்லா ரன்னால் முகமது சிராஜும் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டானார்.

இதனால் இந்திய அணி 33.2 ஓவர்களிலேயே 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 9(6) ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சால் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்துவந்த லபுஷேனும் ரன் ஏதுமின்றி ஜடேஜா பந்துவீச்சில் க்ளின் போல்ட் ஆனார். ஆனால் அந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

இதனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் கவஜா- மார்னஸ் லபுஷேன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருப்பினும் லபுஷேன் 31(91) ரன்கள் எடுத்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் பதிவுசெய்த கவாஜா 60(147) ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், 26(38) ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இதில் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் 7(36) மற்றும் கேமரூன் கிரீன் 6(10) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். 

Be the first to comment on "மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 47 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை."

Leave a comment

Your email address will not be published.


*