சென்னை : இந்தியா-ஆஸ்திரேலேயா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்தூரில் தொடங்குகிறது. இதற்காக இவ்விரு அணி வீரர்களும் தீவிரப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே டிசம்பர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாததால் கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பரத் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு இன்னிங்ஸில் பெரியளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்றாலும், டெல்லியில் நடைபெற்ற கடைசி இன்னிங்ஸில் 22 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 23 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய கே.எஸ்.பரத் இதுகுறித்து கூறுகையில, “நான் டெல்லியில் சந்தோஷமாக விளையாடினேன் .என்னுடைய பணி ஆட்டத்தை எளிமையாக வைத்துக்கொள்வது. நாம் தற்காப்பு ஆட்டத்தில் நம்பிக்கையோடு விளையாட வேண்டும். பார்டர் கவாஸ்கர் தொடரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் விளையாடுவதற்கு ஒன்றும் கடினமாக இல்லை. உங்கள் திறமைகளை நம்பி, உங்கள் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் நிச்சயம் ரன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
டெல்லியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் ஆறாவதாக களமிறங்கி பேட்டிங் செய்வேன் என்று ரோஹித் ஷர்மா என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தருணத்தில், நாம் அணிக்காக ஏதேனும் பேட்டிங்கில் பங்களிக்க வேண்டும் என்று தயாராக இருந்தேன்.
நோக்கம் ஒரு பிரச்சனையல்ல, இந்த ஆடுகளத்தில் ஷாட் தேர்வு மிகவும் முக்கியமாக இருந்தது. இங்கு ஷாட் தேர்வுகள் சரியாக இருந்தால் ரன்கள் கிடைக்கும். அதற்காக வெறும் தடுப்பாட்டுத்தை மட்டுமே நம்பியிருந்தால் நிச்சயம் ரன் கிடைக்காது. எனவே நான் எப்படி ரன் கிடைக்கும் என்பதை யோசித்து விளையாடினேன்.
ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற டாப் கிளாஸ் ஸ்பின்னர்களின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பிங் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ததால்தான், எனக்கு இதில் நல்ல அனுபவம் கிடைத்தது. இதன்மூலம் என்னுடைய வேலையும் சுலபமாக இருந்தது. ஒரு வீரராக, உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரும் என்று எப்போதும் எதிர்பாருங்கள் .நான் இந்தவொரு வாய்ப்புக்காக என்னையே தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இந்தியா ஏ அணிக்காக நாக்பூரில் விளையாடி இருக்கிறேன். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. தற்போது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது என்னுடைய மிகப்பெரிய கனவு. இதில் நான் சிறப்பாக செயல்படுவேன்” இவ்வாறு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "உங்கள் தற்காப்பை நீங்கள் நம்ப வேண்டும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கே.எஸ்.பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."