துபாய்: மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்து அணியின் டேவான் கான்வே, இந்திய அணியின் ஷுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இணம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் ஷுப்மன் கில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. குறிப்பாக கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவருடைய பேட்டிங் பாராட்டும் வகையில் அமைந்தது.
இதில் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் முறையே 70,21 ரன்களை எடுத்திருந்த கில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 116 ரன்கள் குவித்தார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் குவித்த கில், இரண்டாவது போட்டியில் 40 ரன்களையும், முன்றாவது ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் எடுத்தார்.
இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் கில் 126 ரன்களை குவித்திருந்தார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மன் கில், ஜனவரி மாதத்தில் மட்டும் 567 ரன்களை குவித்துள்ளார். அதோடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் பார்மெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களுடான சந்திப்பில் பேசிய ஷுப்மன் கில் இதுகுறித்து கூறுகையில், “ஜனவரி மாதம் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாக வாய்ந்தது. சிறந்த வீரருக்கான விருதை அறிவித்து இந்த மாதத்தை எனக்கு மறக்க முடியாத ஒன்றாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்றியுள்ளது. மேலும் நம்முடைய திறமை அங்கீகரிக்கப்படும்போது நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள இந்த தருணத்தில் ஐசிசி என்னை கவுரவப்படுத்தியுள்ளது மறக்க முடியாத ஒன்றாகும்” இவ்வாறு ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியா அணியின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வாகினர். இதில் இங்கிலாந்து மகளிர் அணியின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் கடந்த மாதத்தின் சிறந்த வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் உள்பட 293 ரன்களைக் குவித்ததன் காரணமாக கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய நட்சத்திர பேட்டர் ஷுப்மன் கில் ஜனவரி 2023 மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டார்."