கேப்டவுன்: எட்டாவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. கேப்டவுனில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஜவேரியா கான்-முனீபா அலி ஜோடியில் இரண்டாவது ஓவரிலேயே ஜவேரியா 8(6) ரன்னுடன் தீப்தி ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பிஸ்மா மரூப் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகள் விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருப்பினும் மறுமுனையில் ராதா யாதவ் பந்துவீச்சில் தொடக்க வீராங்கனை முனீபா 12(14) ரன்களுடன் வெளியேற, அடுத்துவந்த நிதாதர் ரன் ஏதுமின்றி அடுத்த ஓவரிலேயே பூஜா வஸ்திரேகரிடம் டக் அவுட்டானார். இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய சித்ரா அமீன் சிறிதுநேரம் தாக்குப் பிடித்து வந்த நிலையில் 1(18) ரன்களில் ராதா யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 68 ரன்களுக்குள 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பிஸ்மா மற்றும் ஆயிஷா நசீம் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் சிறப்பாக விளையாடிய பிஸ்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதில் பிஸ்மா மரூஃப் 68(55) ரன்களுடனும், ஆயிஷா நசீம் 43(25) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு யஸ்திகா பாட்டியா -ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் நிதானமாக விளையாடி வந்த யஸ்திகா 17(20) ரன்களில் சாடியா இக்பால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா 33(25) ரன்களில் நஸ்ரா சந்து பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 16(12) ரன்களில் நஸ்ரா சந்திடமே விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட, மறுமுனையில் ரோட்ரிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53(38) ரன்களுடனும், ரிச்சா கோஷ். 31(20) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
Be the first to comment on "மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது"