நாக்பூர்: இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 தொடங்கி மார்ச் 13 வரையிலான தேதிகளில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அஹமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் பங்கேற்கவில்லை. அவரைத்தொடர்ந்து காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயரும் முதல் போட்டியில் இடம்பெறவில்லை. இதனால், இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிஷப் பந்த் இடம் கே.எஸ்.பரத்துக்கு கிடைக்குமா? அல்லது இஷான் கிஷனுக்கு கிடைக்குமா? என்ற கேள்வி நிலவுகிறது. அது மட்டுமல்லாமல், தொடக்க வீரராக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளது என்பதால், சிறந்த ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மட்டுமல்ல பந்துவீச்சு துறையிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனெனில் ஜடேஜா, அஸ்வின், ஷமி, சிராஜ் ஆகியோரின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், கடைசி இடத்திற்கு குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
ப்ளேயிங் லெவனில் இப்படி பல குழப்பங்கள் தீர்க்காமல் உள்ள நிலையில், இந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார். அதன்படி மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘தற்போது ஷுப்மன் கில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே, அவரை புறக்கணிப்பது கடினம். அதேசமயம், சூர்யகுமார் யாதவ் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் இந்த இருவரில் ஒருவருக்குத்தான் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். அது யார் என்பதை இன்னமும் நாங்கள் முடிவுசெய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக இந்திய டெஸ்ட் அணியின் மேட்ச் வின்னராக ரிஷப் பந்த் பலமுறை இருந்திருக்கிறார். அவருடைய இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினம். எனவே, ரிஷப் பந்த் இடம் யாருக்கு என்ற கேட்கப்பட்ட கேள்விற்கு பதிலளித்த ரோஹித், ‘‘நாங்கள் ரிஷப் பந்தை மிகவும் மிஸ் செய்கிறோம். எனினும், அவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய அணியில் வீரர்கள் இருப்பதால் எந்தவொரு பிரச்சினை இல்லை” எனக் கூறினார்.
பந்துவீச்சு துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, ‘‘இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய நான்கு பேருமே திறமையானவர்கள். இந்த நான்கு பேரில் பிட்சின் தன்மைக்கு ஏற்ப யார்யாருக்கு இடம் கிடைக்கும் என்பது தெரிய வரும். நான்கு பேருமே சிறந்தவர்கள் என்றால், சுழற்பந்துவீச்சு துறை குறித்து எந்த கவலையும் இல்லை” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "ரோஹித் ஷர்மா இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் பற்றி வினோதமான கருத்தை தெரிவித்தார்"