பிங்க் பால் டெஸ்டில் இந்தியா முன்னிலை புஜாரா, கோலி அரை சதம்

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் பிங்க் நிற பந்தை முதலில் இந்திய அணி வீசுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மைதானத்திற்கு வந்து வீரர்களை வாழ்த்தி, போட்டியை தொடங்கி வைத்தனர். 

இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

இதனால் வங்காளதேசம் அணி 30.3  ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 24 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய புஜாரா கேப்டன் விராட் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 55 ரன்னில் வெளியேறினார். புஜாராவை தொடர்ந்து ரகானே இறங்கினார். இந்த ஜோடி தொடர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இறுதியில், பகல் -இரவு டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 32 ரன்னைத் தொட்டபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஐந்தாயிரம் ரன்களை கடந்தார். ஐந்தாயிரம் ரன்களை கடந்த அவருக்கு 86 இன்னிங்சே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து முதல் இடத்தில் இருந்தார். விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிளைவ் லாய்டு 106 இன்னிங்சிலும், தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 110 இன்னிங்சிலும், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டன் 116 இன்னிங்சிலும், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் 130 இன்னிங்சிலும் ஐந்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

Be the first to comment on "பிங்க் பால் டெஸ்டில் இந்தியா முன்னிலை புஜாரா, கோலி அரை சதம்"

Leave a comment

Your email address will not be published.


*