ஐதராபாத்: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றிபெற்று கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகள் வரும் ஜனவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும், டி20 போட்டிகள் ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று சரியாக பகல் 1:30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு திருமணம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார். அவர் சிகிச்சைக்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்படவுள்ளார். எனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் படிதர் மாற்று வீரராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள 29 வயதான படிதர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேச அணிக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் அவரால் விளையாட முடியவில்லை. இதுவரை 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ள அவர், 34.33 சராசரியுடன் 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
இருப்பினும், படிதர் ஆடும் லெவனில் அறிமுக வீரராக களமிறங்குவதில் சந்தேகம் தான். ஏனெனில், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் தான் அணியின் தேர்வாக இருப்பார். மேலும் இலங்கைக்கு எதிரான எந்தவொரு ஒருநாள் போட்டிக்கும் எடுக்கப்படாத இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பதை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் அக்ஷர் படேல் அணியில் எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் இடம்பெறாததால் வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வரவாய்ப்புள்ளது. இவருடன் இணைந்து குல்தீப் யாதவும் சுழலில் கலக்குவார் என இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளனர். இவர்களுடன் அர்ஷ்தீப் சிங்கும் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.
Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார்."