பெனோனி: மகளிருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(19 வயதுக்கு உட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
அந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். அதன் அடிப்படையில் இந்திய மகளிர் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று பெனோனி நகரில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற யு.ஐ.இ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்வேதா செஹ்ராவத் -கேப்டன் ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி வந்த நிலையில், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும் ஷஃபாலி வர்மா4 சிக்ஸர், 12 பவுண்டரி உட்பட 78(34) ரன்களின் போது இந்துஜா நந்தகுமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 2 சிக்ஸர்,5 பவுண்டரி உட்பட 49 ரன்களை எடுத்திருந்த போது மஹிகா கவுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கோங்காடி த்ரிஷா 11(5) ரன்களுடன் சமைர தர்னிதர்கா பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்வேதா செஹ்ராவத் 10 பவுண்டரி உட்பட 74(49) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 219 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான தீர்தா சதீஷ்- லாவண்யா கெனி ஜோடியில் தீர்தா சதீஷ் 16(5) ரன்கள் எடுத்தபோது ஷப்னம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சமைர தர்னிதர்கா 9(15) ரன்களுடன் டைட்டாஸ் சாது பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய மெஹிகா கவுர் நிலைத்து நின்று விளையாட, அடுத்து வந்த ரினிதா ரஜித் 2(8) சொற்ப ரன்களுடன் மன்னத் காஷ்யப் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் 26(26) ரன்கள் எடுத்திருந்த போது மெஹிகா கவுர் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிவந்த லாவண்யா கெனியும் 24(54) ரன்களில் பார்ஷவி சோப்ரா பந்துவீச்சில் வெளியேறி நடையைக்கட்டினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது.
Be the first to comment on "பெண்கள் யு19 உலகக்கோப்பை: ஷஃபாலி வர்மா, ஸ்வேதா செஹ்ராவத் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது."