கொல்கத்தா: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- ஷுப்மன் கில் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர்.
இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 42(49) ரன்களைச் சேர்த்தபோது கருணரத்னே பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கில் 52 பந்துகளில் அரைதம் கடந்தார். இதனையடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் -விராட் கோலி ஜோடியில் கோஹ்லி ஒருபுறம் 48 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் கில் 89 பந்துகளில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் 116(97) ரன்களுடன் கில் கசுன் ரஜிதா பந்துவீச்சால் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 46ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் 38(32) ரன்களிலேயே லஹிரு குமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாட முற்பட்டு 7(6) ரன்களுக்கு லஹிரு குமாரிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 4(4) ரன்களுக்கு ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த கோஹ்லி 13 பவுண்டரி, 8 சிக்ஸர் என 166(110) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்து அசத்தினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்தி கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் டாப் ஆர்டரை காலி செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் அவிஷ்கா ஃபெர்ண்டாண்டோ 1(4), நுவனிந்து ஃபெர்னாண்டோ 19(27), குசால் மெண்டீஸ் 4(7), வநிந்து ஹசரங்கா 1(7) ஆகியோரது விக்கெட்டுகளை முகமது சிராஜ் கொத்தாக கைப்பற்றி அசத்தினார்.
அதேபோல அசலங்கா 1(4), துனித் வெல்லலகே 3(13) ஆகியோரை முகமது ஷமியும், கேப்டன் தசுன் ஷனகா 11(26), லஹிரு குமார் 9(19) ஆகியோரை குல்தீப் யாதவும் தங்களது பங்கிற்கு வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி 22 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷும் செய்து அசத்தியது. அதுமட்டுமின்றி இப்போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
Be the first to comment on "கோஹ்லி, சிராஜின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தது."