மும்பை: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் சுப்மான் கில் அறிமுக போட்டியிலேயே 7(5) ரன்களுடன் மகீஷ் தீக்சனா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 7(10) ரன்களில் சாமிக்க கருணாரத்ன பந்துவீச்சில் வெளியேற, தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சனும் தனஞ்செய்யா டி சில்வா வீசிய பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு 5(6) ரன்களில் ஆட்டழிந்தார்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாச, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 37(29) ரன்களோடு வனிந்து ஹசரங்க பந்துவீச்சில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் 29(27) ரன்களோடு தசுன் ஷனகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
இருப்பினும் இறுதியில் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடா-அக்ஸர் படேல் ஜோடி அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 162 ரன்களைச் சேர்த்தது. இதில் தீபக் ஹூடா 41(23) ரன்களுடனும், அக்ஸர் படேல் 31(20) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிஷங்கா 1(3) ரன்னிலும், தொடர்ந்துவந்த தனஞ்செய டி சில்வா 8(6) ரன்னிலும் அறிமுக வீரரான ஷிவம் மாவியிடம் விக்கெட்டை இழந்தனர்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 12(15) ,பனுகா ராஜபக்ஷா 10(11) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த குசால் மெண்டிஸ் 28(25) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் தசுன் ஷனகா-வனிந்து ஹசரங்கா ஜோடியில் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்த, மறுபுறம் 21(10) ரன்கள் எடுத்திருந்த ஹசரங்கா ஷிவம் மாவியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து அதிரடியாக விளையாடி அரைசதத்தை நோக்கி சென்ற தசுன் ஷனகாவும் 45(27) ரன்களில் உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழக்க, இலங்கை அணியின் தோல்வி உறுதியானது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் களமிறங்கிய சமீரா கருணரத்னே 19வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார்.
இறுதியாக இலங்கை வெற்றிக்கு கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், கருணரத்னே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Be the first to comment on "இறுதிஓவர் வரை பதற்றத்தை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது."