மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
குறிப்பாக நடப்பாண்டில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இது என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இருப்பினும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் பிக் த்ரீ என்று கருதப்படும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் எதிர்காலத்திற்கு தயாராகவுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய டி20 அணி புதிய தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கிறது.
ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கும் நடப்பாண்டில், டி20 தொடருக்கு அதிக முன்னுரிமை இல்லை என்றாலும், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு, இந்த தொடரின் வெற்றி ஹர்திக் தலைமையிலான டி20 அணியின் எதிர்காலத்திற்கான திட்டமிடலைத் தொடங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி இந்தியாவின் புகழ்பெற்ற முதல் மூன்று வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அணியின் ஒரு பகுதியாக இல்லாமல், இந்திய டி20 அணி எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும்.
சமீப காலங்களில் இந்திய டி20 அணியிலுள்ள பிரச்சனை, அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடும் உறுதியான நோக்கமும், துணிச்சலான திறமையும் இல்லாததுதான். தனிப்பட்ட தாக்கம் செலுத்தும் செயல்திறன் குறித்த வீரரின் யோசனையால் அணி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டதுடன் டி20 உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்திற்கு வழிவகுத்தது.
இலங்கைக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படாததால், இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அதிக ரன்கள் குவித்த வான்கடே ஸ்டேடியத்தில் முதல் டி20 போட்டியில் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கவுள்ளனர். சமீபகாலங்களில் இவ்விரு வீரர்களும் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். கூடுதல் தொடக்க வீரராக சுப்மான் கில் இடம்பெற்றுள்ளார்.
3வது இடத்தில் உலகின் நம்பர்-1 டி20 பேட்டர் சூர்யகுமார் யாதவ் களமிறங்குகிறார். அடுத்ததாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் அதிகம் விளையாடாத ராகுல் திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆடும் லெவனில் ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்கவுள்ளதால், ஆல் ரவுண்டர் தீபக் ஹுடா 5வது இடத்திலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 6வது இடத்திலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோருடன் அறிமுக வீரர்களான ஷிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "இந்திய டி20 அணி பிக் த்ரீ இல்லாமல் எதிர்காலத்திற்கு தயாராகிறது."