மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று, 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான பெத் மூனி (2), லிட்ச்ஃபீல்ட் (11) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் மெக்ராத் 26(26) ரன்களுடனும், எல்லீஸ் பெர்ரி 18(14) ரன்களுடனும் ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய கார்ட்னெர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்த, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் கார்ட்னெர் 66(32) ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 64(35) ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இந்திய மகளிர் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா ஷஃபாலி வர்மா,தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 4(4) ரன்களிலும், ஷஃபாலி வர்மா 13(14) ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹர்லீன் டியோல் 24(16) ரன்கள் குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 12(11) ரன்களில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரிச்சா கோஷ் 10(9) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் தேவிகா வைத்யா 11(14), ராதா யாதவ் 0(1), அஞ்சலி சர்வானி 4(12), ரேனுகா சிங் 2(3) என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் நீண்டநேரம் களத்திருந்து தனிஒருவராக போராடி வந்த தீப்தி ஷர்மாவும் 53(54) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய அணி சார்பில் டார்சி பிரவுன், அனாபெல் சதர்லேண்ட், தஹிலா மெக்ராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும், ஆஷ்லீக் கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும், ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீழ்த்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."