தாக்கா: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்துமுடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 22ஆம் தேதி தாக்காவில் உள்ள ஸ்ரீபங்களா தேசிய மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேலும் காயம் காரணமாக இத்தொடரின் முதல் போட்டியிலிருந்து ரோஹித் சா்மா விலகியதால், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளாா்.
மேலும் இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற இத்தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமின்றி இத்தொடரை வெல்வதோடு, அடுத்ததாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அவரது காயம் குணமடையாததால் இப்போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்கதேசத்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரோஹித் ஷர்மா, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில் காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த ரோஹித் ஷர்மா இரண்டாவது போட்டியிலும் இடம்பெறாததால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை கே.எல்.ராகுலே வழிநடத்துவுள்ளார்.
அதேபோல வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Be the first to comment on "வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகினார்."