க்ரைஸ்ட் சர்ச்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி க்ரைஸ்ட் சர்ச் நகரத்தில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசேய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான்-சுப்மான் கில் ஜோடி இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் கில் 13(22) ரன்களுடனும், தவான் 28(45) ரன்களுடனும் அடுத்தடுத்து நடையைக்கட்டினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 10(16), சூர்யகுமார் யாதவ் 6(10), தீபக் ஹூடா 12(25) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிந்து ஷாக் கொடுக்க, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 49(59) ரன்களுடன் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் ரன்களைச் சேர்க்க, தொடர்ந்து வந்த தீபக் சஹார் 12(9), யுஸ்வேந்திர சஹால் 8(22) , அர்ஷ்தீப் சிங் 9(9) ஆகியோர் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் 63 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதத்தைப் பதிவுசெய்தார். தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போது 51(64) ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதனால் 47.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை மட்டுமே இந்திய அணி சேர்த்தது. இதில் நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டெரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. ஏனெனில் தொடக்க வீரர்களான ஃபின் ஆலன்- டெவோன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களை விளாசினர்.
இதில் சிறப்பாக விளையாடி வந்த ஆலன் 57(54) ரன்கள் எடுத்தபோது உம்ரான் மாலிக் வேகத்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 38(51) ரன்கள் எடுத்திருந்த கான்வே, தொடர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 0(3) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டது.
இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் மழை நிற்காமல் நீண்ட நேரமாக பெய்துக்கொண்டே இருந்ததால் போட்டி கைவிடப்பட்டது. ஏனெனில் முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குறைந்தது 20 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் மட்டுமே விளையாடி இருந்தால் முடிவில்லாமல் அமைந்த போட்டி என்று நடுவர் அறிவித்தார். எனினும் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Be the first to comment on "கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒருநாள் தொடரை இந்திய அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது."