ஹாமில்டன் : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்து முடிந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று ஹாமில்டன் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
அதிகாலை இந்திய நேரப்படி ஆறு முப்பது மணிக்கு தொடங்க வேண்டிய இப்போட்டி ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. மேலும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் 15 நிமிடத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் – சுப்மன் கில் ஜோடி பொறுப்புடன் விளையாடி வந்தனர். இந்நிலையில் இந்திய அணி 4.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்ட நிலையில், மழை நின்ற பின் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிகர் தவன் 2(8) மற்றும் சுப்மன் கில் 19(21) ஜோடியில் மாட் ஹென்ரி பந்துவீச்சில் தவான் 3(10) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. இதில் சுப்மன் கில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 45(42) ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 34(25) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அதன்பின்னரும் ஹாமில்டனில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ஆனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை மழையால் அந்த போட்டியும் கைவிடவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர் மழையால் கைவிடப்பட்டது"