அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி சுற்றில் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றில் விளையாடவுள்ள இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேற அடிலெய்டு மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இத்தொடரின் முதல் 4 லீக் போட்டிகளில் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் முதல் 4 போட்டிகளில் களமிறங்காத ரிஷப் பந்த்க்கு, ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் -ரிஷப் பந்த் இருவரில் யார் விளையாடுவர் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அக்கேள்விக்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, “ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் விளையாடியபோது நாங்கள் எந்த அணியை அரையிறுதியில் எதிர்கொள்வோம் என்று தெரியவில்லை. எனவே எதிரணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷப் பந்த் விளையாடினார்.
அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் விஷயத்தில் நான் கடந்த போட்டியிலேயே சொல்லிவிட்டேன். நடப்பு தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளை தவிர்த்து எந்த போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் ரிஷப் பந்த் விளையாடாமல் இருந்தார். எனவே அரையிறுதி அல்லது இறுதிபோட்டிக்கு முன்பாக ரிஷப் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்பாப்வே போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏனெனில் டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென அரையிறுதி போன்ற முக்கிய போட்டியில் ஒருவரை விளையாட வைப்பது நியாயமற்றது. இருப்பினும் அரையிறுதி, இறுதிப்போட்டி, லீக் என எந்த போட்டியாக இருந்தாலும், அதில் விளையாட தயாராக இருக்குமாறு ஏற்கனவே எங்களது வீரர்களிடமும் கூறியுள்ளேன்.
எனவே தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் நாங்கள் இன்னும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. ஒரு தொடரை மட்டுமே வைத்துக்கொண்டு வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தருவதில்லை. இருப்பினும் மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்காக ஒரு அதிரடியான இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இருப்பினும் நாளை என்ன நடைபெறும் என இப்போதே சொல்லமுடியாது. ஆனால் நாளைய போட்டிக்கு இரண்டு விக்கெட் கீப்பர்களும் நிச்சயம் விளையாடுவார்கள்” இவ்வாறு ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ரோஹித் ஷர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."